Tuesday, 3 July 2012

பூந்தோட்டம்

மண்ணின் மேல்புறம்
சிமெண்ட் பூச்சு,
அதன் மேல்
தொட்டியில் பூச்செடிகள்!

மாநகரங்களின்
பூந்தோட்டங்கள்!

குருவி

விரட்டி அடிக்கப்பட்ட
காக்கை குருவிகளை,
அமாவாசை தினத்தில்
கரைந்து அழைத்தேன்!
மாநகர குடியிருப்பின்
மொட்டை மாடியில்,
செல்போன் டவர்களுக்கு
மத்தியில் நின்றபடி!

Saturday, 23 June 2012

கோபம்

காந்தியின் மீது
அவனுக்கு என்ன கோபமோ,
தலையில் குத்துகிறான்
தபால் ஊழியன்!

- சுதந்திரன்

விசுவாசம்

விலை குறைத்து கேட்டதனால்
விசுவாசமாய் கடிக்கிறதோ,
புதிதாய் வாங்கிய செருப்பு!

- சுதந்திரன்

தந்தையுமானவன்

ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் தருணத்தை
என் மனைவிக்கு
பரிசாகத் தந்துவிட்டு

ஈரக்கண்ணாகிப் போன
என் ஓரக்கண்ணை
ஒற்றை விரலால்
ஒற்றி எடுத்துவிட்டு

சொல்லொண்ணா பூரிப்போடும்
எழுதவொண்ணா சந்தோஷத்தோடும்
இன்று புதிதாய் அலர்ந்த
என் இளவரசனை
பெருமிதத்தோடு
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

நேற்று வரை,
அம்மாவுக்கு பிள்ளையாகவும்
நண்பனுக்கு தோழனாகவும்
மனைவிக்கு கணவனாகவும்
இருந்த நான்

இன்று முதல்
என் இளவரசனுக்கு
"தந்தையுமானவன்"!

- சுதந்திரன்